ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா – 20.12.2016
பத்திரிகைச் செய்தி
சமுதாயத்தின் நாகரீக வளர்ச்சிக்கு இலக்கியம் ஒரு முக்கியமான சான்று. அதிலும் சிறுகதை இலக்கியம் வாழ்க்கையின் சகல அம்சங்களையும் விளக்க நல்லதொரு கருவியாகப் பயன்படுகிறது.
மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் இடம் பெற்ற பல சிறுகதைகளில் அன்றைய மக்களுக்கு மட்டுமல்லாமல் இன்றைய மக்களுக்கும் வேண்டிய அறிவுரைகள் உள்ளன.
ஆன்மிக வாழ்க்கையை மக்களுக்கு எளிதாகப் போதிக்க வந்த பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும்கூட சிறுகதைகளையே தேர்ந்தெடுத்தனர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்தியையும் சமுதாயச் சீர்திருத்தத்தையும் வலியுறுத்த கல்கி, ராஜாஜி போன்றோரும் சிறுகதை இலக்கியத்தைக் கைக்கொண்டனர். மணிக்கொடி காலம் தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பொற்காலம்.
மனிதனின் சமகாலத்துப் பிரச்னைகளை அவனுக்கு ஏற்ற முறையில் புரிய வைப்பதற்கு சிறுகதை இலக்கியங்கள் சிறந்த களமாக விளங்குகின்றன.
ஆனால்…., தற்காலத்தில் மனித வாழ்வைப் பொருள் பொதிந்ததாக மலரச் செய்யக்கூடிய இறையுணர்வு, மனிதநேயம், கருணை, பரிவு, தன்னம்பிக்கை, பெரியோர் வாழ்வைப் பிரதிபலித்தல் போன்ற குணங்களைச் சித்தரிக்கும் கதைகள் குறைந்துள்ளது சமூகத்திலுள்ள நோயை எடுத்துக்
காட்டுகிறது.
இந்தக் குறையைப் போக்க ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டிகளை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
மாதந்தோறும் 1,70,000 பிரதிகள் விற்பனை யாவதும், இவற்றுள் ஒரு லட்சத்திற்கு அதிகமான சந்தாதாரர்கள் இளைஞர்கள் என்பதும் முக்கியமானது.
இது 2016-2017 சகோதரி நிவேதிதையின் 150-வது பிறந்த ஆண்டு. அதை முன்னிட்டு அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்ட அல்லது நம் நாடு மற்றும் தனி மனிதனை – வளமான எதிர்காலத்தை மையமாகக் கொண்ட அல்லது சமூகத்தில் வேண்டாதவற்றைச் சரி செய்கின்ற வழிமுறைகளை வலியுறுத்தும் சிறுகதைகள் போட்டிக்கு வரவேற்கப்பட்டன.
இந்தப் போட்டியில் குறுகிய காலத்தில் சுமார் 700 கதைகள் வந்தன.
அவற்றுள் சகோதரி நிவேதிதை மையகமாகக் கொண்ட கதைகள், இதயத்தைத் தொடும் மனித நேயக் கதைகள், அன்பு சார்ந்த குடும்பக்கதைகள், தன்னம்பிக்கைக் கதைகள், பெண்மையையும் நாட்டையும் போற்றும் சம்பவங்கள் கதைகளாக உலாவந்தன.
கதாசிரியர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், எழுத்துலகிற்குப் புதியவர்கள்.
பரிசை வென்ற 6 எழுத்தாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் ரொக்கமும் நினைவுப் பரிசும் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் 164-வது ஜயந்தி தினமான 20.12.2016 செவ்வாய் அன்று மாலை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அரங்கில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனை மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தர் வழங்கினார்.
அத்துடன் இந்த விழாவில் சகோதரி நிவேதிதா 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு திரு. விவேக்சங்கர் எழுதி இயக்கிய சகோதரி நிவேதிதா தமிழ் மேடைநாடகத்தின் டிவிடியினையும் சுவாமி கௌதமானந்தர் வெளியிட்டார்.

0