புத்தக விமர்சனம்
நூல்: அளசிங்கப் பெருமாள் சுவாமி விவேகானந்தரின் அருமைச் சீடர். ஆசிரியர்: சுவாமி சுநிர்மலானந்தர். விலை: ரூ.130/-. பக்கம்: 382. வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4. ஃபோன் 044-24621110.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையிலும், அவரது செய்தியைப் பரப்பியதிலும், ராமகிருஷ்ண இயக்கம் தென்னிந்தியாவில் வேரூன்றியதிலும் மிகப் பெரும் பங்காற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர் சென்னைவாசியான அளசிங்கப் பெருமாள். தவிர, சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று ஹிந்து மதத்தின் பெருமையை சர்வமத மஹாசபையில் பறை சாற்றிய பின்னணியிலும் இவரது பங்கு மகத்தானது. அத்தகையவரின் வாழ்க்கை வரலாற்றையும், இவருக்கும் விவேகானந்தருக்கும் இடையே எப்படி நட்பு உருவானது, அது இவருக்கு குரு பக்தியையும், தேச பக்தியையும் எப்படி உருவாக்கியது - போன்ற பல்வேறு விஷயங்களை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியான இந்நூலாசிரியர் ஆங்கிலத்தில் நூலாகப் படைத்தார். அதை இம்மடத்தின் பக்தரான ஹரிஹர கிருஷ்ணமூர்த்தி எளிய தமிழில் மொழிபெயர்த்து இந்நூலை வெளியிட்டுள்ளனர். இந்நூலில் மொத்தம் 20 அத்தியாயங்கள் உள்ளன. அதில் அளசிங்கரின் வாழ்க்கை வரலாற்றை விட, விவேகானந்தருக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை, கடின உழைப்பு, தியாகம், அளசிங்கப் பெருமாள் தேசபக்தி போன்ற பல விஷயங்கள் இந்நூலில் விவரிக்கப்படுகின்றன. தவிர, சகோதரி நிவேதிதை, திலகர் முதலான தேசத் தலைவர்கள் பலருடனும் அளசிங்கப் பெருமாள் கொண்டிருந்த தொடர்புகள், இவருக்கு திலகர் எழுதிய ஒரு கடிதம், சுவாமிஜியும் அளசிங்கருக்கு எழுதிய 43 கடிதங்கள், அவை எந்தெந்த தருணத்தில் எதற்காக எழுதப்பட்டன போன்ற தகவல்களும் பிற்சேர்க்கையாக இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் அன்றைய காலக்கட்டத்தை பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளன. 'குருவின் பயணத்திற்கான ஏற்பாடுகள்' என்ற அத்தியாயத்தில், விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கான நோக்கத்தை அறிந்த ஹைதராபாத் நிஜாம், சுவாமி விவேகானந்தரை ஹைதராபாத்திற்கு அழைத்து, அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்து கௌரவித்த விஷயங்கள், மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளது வியக்கத் தக்கது. தவிர, இந்நூல் அரியவகையான 40-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன், குறைந்த விலையில் அதிகப் பக்கங்களுடன் வெளியாகியுள்ளது சிறப்பானது. -பரக்கத் (துக்ளக் பத்திரிகை)