தொடக்க விழா 14-04-2022
சென்னை மடத்தின் பிரம்மானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தர் தலைமை விருந்தினர் மற்றும் இதர துறவிகளை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
பிறகு விவேகானந்தர் கல்லூரியின் செயலாளர் சுவாமி சுகதேவானந்தர் தமது உரையில், 'கல்வி என்பது வெறும் தகவல்களைத் திரட்டுவதல்ல, மாறாக பண்பு நலன்களை வளர்ப்பது' என்ற சுவாமி விவேகானந்தரின் பிரபலமான முழக்கத்தை அரங்கிலிருந்தவர்களுக்கு நினைவுறுத்தினார். பல்கலைக்கழக மானியக் குழுவும் தற்பொழுது இதே கருத்தை வலியுறுத்துகிறது. 'எதிர்மறையானது எதுவும் இங்கில்லை அனைத்தும் நேர்மறையே' என்ற சுவாமி விவேகானந்தரின் அறைகூவலை எடுத்துரைத்து, சுவாமி விவேகானந்தரின் பெயரில் அமைந்திருக்கும் இந்த மனிதவள உன்னதப் பயிற்சி நிறுவனம் அத்தகைய நேர்மறையான கல்வியை வழங்கும் என்று கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் திரு மாலன் வி. நாராயணன் அவர்கள், "கல்வியானது மன வலிமையைக் கூட்டி பலவீனத்தைக் குறைத்து ஒவ்வொருவரும் வேற்றுமைகள் நிறைந்த நமது சமூகத்தில் ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். “சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது சமூகத்தினரால் இயலாது, ஆனால் குடும்ப பந்தங்களைத் தியாகம் செய்த துறவிகளால் மட்டுமே அது சாத்தியம்” மேலும் அவர் “ராமகிருஷ்ண மடம் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் பாரதத்திற்காகச் சிறந்த குடிமகன்களை உருவாக்கி வருகிறது” என்று குறிப்பிட்டார்.
பிறகு ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவரும் சென்னை மடத்தின் தலைவருமாகிய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தர் தன்னுடைய ஆசியுரையில், “இன்று விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறையில் உன்னதமான கல்வி பெற்ற பலர் உள்ள போதிலும், சமுதாயத்தில் தீமைகள் முற்றிலுமாக அழியவில்லை. அதற்குக் காரணம் சுவாமி விவேகானந்தர் வலியுறுத்திய 'ஏட்டுக் கல்வியுடன் கூடவே பண்பு நலனை வளர்க்கும் கல்வியும்' பயிற்றுவிக்கப்படாததுதான்.” ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஐந்து முக்கிய குணங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார், அவையாவன :
1) உண்மை பேசுவது, 2) கடவுளிடம் நம்பிக்கை கொள்வது, 3) வாழ்வில் அப்பழுக்கற்ற தன்மை, 4) சுயநலமின்மை 5) சுயநலமற்ற சேவை. இந்த ஐந்து குணங்களும் ஒரு மனிதனுக்குத் தன் வாழ்வில் உன்னதத்தைப் பெற்றுத் தரும். ‘நற்குணங்களின் செயல்பாட்டில் மதத்தை விலக்கி வைக்கலாம்’ என்ற கருத்து பற்றி சுவாமிகள் பேசும்பொழுது, சுவாமி விவேகானந்தர் கூறிய 'ஓர் இந்தியன் எக்காலத்திலும் நாத்திகனாக இருக்கவே முடியாது' என்ற கருத்தை சுட்டிக்காட்டி, எனவே மனித வளத்தின் உன்னதம் என்பது கடவுள் நம்பிக்கை என்ற அடித்தளத்தின் மீதே அமைக்கப்பட வேண்டும், என்றார்..
சுவாமி ஸுப்ரஜ்ஞானந்தர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.