ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்வு
கொல்கத்தா, ஏப். 25: ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் 17வது தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் தலைவராக இருந்த சுவாமி ஸ்மரணானந்தாஜி மகராஜ் கடந்த மாதம் காலமானார். இதையடுத்து புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகராஜ் நேற்று பதவியேற்றார்.
95 வயதான இவர் பேலூர் மடத்தில் நடைபெற்ற மடத்தின் அறங்காவலர் குழு மற்றும் மிஷனின் நிர்வாகக் குழு கூட்டத்தில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் 17வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுவாமி கவுதமானந்தாஜி மகராஜுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1929 ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த சுவாமி கவுதமானந்தாஜி, ராமகிருஷ்ணா மிஷனின் பெங்களூரு கிளையில் சேர்ந்தார். 2017ல், அவர் மடத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.