Dinamani News Paper Report about Srimat Swami Smaranananda Maharaj Mahasamadhi

By - Webteam
27.03.24 11:37 AM
ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தர் மறைவு

கொல்கத்தா, மார்ச் 26; மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா (94) செவ்வாய்க்கிழமை காலமானார்.

கடந்த ஜன.29-ஆம் தேதி சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மருத்துவமனையில் சுவாமி ஸ்மரணானந்தர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசக் கருவி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுவாமி ஸ்மரணானந்தர் செவ்வாய்க்கிழமை இரவு 8.14 மணிக்கு மகாசமாதி அடைந்தார் என்று ராமகிருஷ்ணா மிஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

ஸ்வாமி விவேகானந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனின் 16-ஆவது தலைவராக 2017-ஆம் ஆண்டு சுவாமி ஸ்மரணானந்தர் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தாஜி மகாராஜ் அவர்களின் மஹா சமாதி. 

நேற்றிரவு (26 மார்ச் 2024)  8.14 மணிக்கு, கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் சேவா பிரதிஷ்டானில், எங்கள் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தலைமை சுவாமிகளான ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மகராஜ் மஹா சமாதி அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.  அவருக்கு வயது 94.

 பூஜனீய மகாராஜின் திருவுடல் பேலூர் மடத்திலுள்ள கலாச்சார மண்டபத்தில் வைக்கப்பட்டு இன்று இரவு (27 மார்ச் 2024) சுமார் 9.00 மணிக்கு இறுதி சடங்குகள் பேலூர் மடத்தில் நடைபெறும். 

ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மஹராஜ் 1929 - ஆம் ஆண்டு நமது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அண்டாமி கிராமத்தில் பிறந்தார். தமது மாணவப் பருவத்திலிருந்தே அவர் ஓர் ஆர்வமுள்ள படிப்பாளியாகவும் ஆழ்ந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்தார்.

அவருக்கு 20 வயதில்  ராமகிருஷ்ண இயக்கத்தின் மும்பை மையத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் கொள்கை மற்றும் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அவர் 1952 - இல் தனது 22 வயதில் மும்பை ஆசிரமத்தில் சேர்ந்து துறவற வாழ்க்கையைத் தழுவினார். ராமகிருஷ்ண இயக்கத்தின் ஏழாவது தலைவரான ஸ்ரீமத் சுவாமி சங்கரனந்தஜி மகராஜ், அதே ஆண்டில் அவருக்கு மந்திர தீட்சை வழங்கினார். 1956 - இல் சுவாமி சங்கரனந்தஜி மஹராஜிடம் இருந்து பிரம்மச்சரிய தீட்சை பெற்ற அவர், அவரிடமிருந்தே 1960 - இல் சன்னியாச தீட்சையும் பெற்று ‘சுவாமி ஸ்மரணானந்தா்’ என்ற நாமத்தையும் பெற்றார்.

மும்பை மையத்தில் இருந்து அவர் 1958 - இல் புத்தக வெளியீடு மையமான அத்வைத ஆசிரமத்தின் கொல்கத்தா கிளைக்கு மாற்றலாகி அங்கு பணியாற்றினார். அவர் ஆசிரமத்தின் மாயாவதி மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு இடங்களிலும் 18 நீண்ட ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 

சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் ஆங்கில இதழான பிரபுத்த பாரதத்தின் உதவி ஆசிரியராக சில ஆண்டுகள் இருந்தார். அத்வைத ஆசிரமத்தின் வெளியீடுகளின் தரத்தை மேம்படுத்தவும் அவர் ஆர்வத்துடன் பணியாற்றினார். இது நிறைய பாராட்டுகளைப் பெற்றது.

அவர் 1976 - இல் பேலூர் மடத்திற்கு அருகிலுள்ள ராமகிருஷ்ண மிஷன் சாரதாபீடம், கல்வி நிறுவனத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் அங்கு சுமார் 15 ஆண்டுகள் நீண்ட பதவியில் இருந்தபோது, ​​சாரதாபீடத்தின் கல்வி மற்றும் கிராமப்புற நல பணிகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டன. 

1978 - ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தின்போது அவர் தனது துறவற சகோதரர்களுடன் இணைந்து விரிவான நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். 

பூஜனீய சுவாமிகள் சாரதாபீடத்திலிருந்து சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு டிசம்பர் 1991 - இல் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னை மடத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்தார். புத்தக வெளியீடுகளுக்கு மிகுந்த ஆர்வம் செலுத்தினார். அவரது காலத்தில்தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருடந்தோரும் நடத்தப்பெறும் பக்தர்கள் மாநாடு தொடங்கப் பெற்றது. 

பூஜனீய சுவாமிகள் 1983 - இல் ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலராகவும்,  ராமகிருஷ்ண மிஷனின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 1995 - இல் அவர் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைமையகத்தில் உதவிச் செயலாளராகச் சேர்ந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இரு அமைப்புகளுக்கும் பொதுச் செயலாளராக 2007 மே முதல் 2007 மே வரை, பணியாற்றிய அவர் இயக்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அகில அளவில் ராமகிருஷ்ண இயக்கத்தை பத்து ஆண்டுகள் வழிநடத்தினார்.

பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும், அவர் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் விரிவாகப் பயணம் செய்து ஆன்மிகத் தொண்டாற்றியபடி, அந்த இடங்களிலுள்ள மடம் மற்றும் மிஷனின் கிளைகள், மற்றும் பிற தனியார் மையங்களையும் பார்வையிட்டார். அந்த வருகைகள் மூலம் அவர் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் வேதாந்தத்தின் செய்திகளை ஏராளமான மக்களிடையே பரப்ப முயன்றார்.  பல ஆன்மிக ஆர்வலர்களுக்கு மந்திர தீட்சையும் வழங்கினார்.  ராமகிருஷ்ண இயக்கத்தின் பல்வேறு இதழ்களில் பல கட்டுரைகளை அவர் அளித்துள்ளார்.

17 ஜூலை 2017 அன்று பேலூர் மடத்தில் நடைபெற்ற மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மிஷனின் ஆட்சிக் குழு கூட்டத்தில் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் 16 - ஆவது தலைவராக தலைவராக சுவாமி ஸ்மரணானந்தாஜி மகாராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பூஜனீய சுவாமிகளின் கட்டுரைகள் மற்றும் உரைகளானவை தொகுத்து, சில நூல்களாகவும் வெளிவந்துள்ளன. அவற்றில் ஸ்மிருதி ஸ்மரன் அனுத்யன் மற்றும் சிந்தன் மனன் அனுஷிலன் வங்காள மொழியிலும், மியூசிங் ஆஃப் எ மாங்க் ஆங்கிலத்திலும் உள்ளன. 

ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தாஜி அவர்கள் ஆன்மிக ஞானம், எளிமை ஆகியவற்றால் அனைவராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்டார்.

அடக்கமான இயல்பும், நகைச்சுவை உணர்வும், ஆன்மிக ஆர்வமும் கொண்டவர். அவரது மகாசமாதியானது நிரப்புவதற்குக் கடினமான ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது.

Webteam