iMedia

சநாதன தர்மத்தை உலகிற்கு உரைத்த தினம்!

By - Webteam
11.09.23 04:18 PM
இந்தக்கட்டுரை செப்டம்பர் 11 தினமணி செய்தித்தாளில் வெளியானது :

உலகைப் புரட்டிப் போட்ட உன்னதமான தலைவர்கள் உரைத்த உரைகள் பல; உலகையே உலுக்கிய தலைவர்களின் சொற்பொழிவுகளும் பல. அவை அந்தந்தக் காலத்திற்கு ஏற்றவை. ஆனால் உலகை உலுக்கவும் செய்யாமல் புரட்டியும்போடாமல், மக்களே, நீங்கள் உன்னதம் மிக்கவர்கள்; தெய்வீகமானவர்கள் என்று உலக மக்கள் எல்லோருக்குமாகப் போதித்த உரை ஒன்றுண்டு. அது சுவாமி விவேகானந்தர் 130 வருடங்களுக்கு முன்பு சிகாகோ சர்வசமய மாநாட்டில் உரைத்ததுதான்.

1893-இல் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சர்வசமயப் பேரவையில் 'அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே' என்று தமது உரையைத் தொடங்கினார். அன்று அவரது நா ஆடியதுமே நானிலம் பாரதத்தின் பெருமையைப் பாட ஆரம்பித்தது. ஆம்,அடிமைப்பட்டுக் கிடந்த நமது நாட்டை அகிலத்தின் முன்பு கனிவுடனும் கம்பீரத்துடனும் காட்டினார் சுவாமி விவேகானந்தர்.

பாரதத்தின் ரிஷிகள் மற்றும் முனிவர்களின் பரஞான அனுபவங்களையும், அபரஞானத் திரட்சிகளையும் விவேகானந்தர் தமது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். உதவு, சண்டையிடாதே ஒன்றுபடுத்து, அழித்து விடாதே: சமரசமும் சாந்தமும் வேண்டும்; கருத்து வேறுபாடு வேண்டாம் என்று அந்தப் பேரவையில் முழங்கினார் சுவாமி விவேகானந்தர்.

போட்டியும், பூசலும், கலவரமும், தீவிர வாதமும் கோலோச்சிய காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தர் இந்தச் செய்தியை உரைத்தது எவ்வளவு முக்கியமானது என் பதை எண்ணிப் பாருங்கள். 'வாழு, வாழ விடு என்ற இந்தச் சிறிய அறிவுரையை மட்டும் அனைத்துச் சமய மக்களும் அவற்றின் குருமார்களும் கடைப்பிடித்தால் உலகம் சொர்க்க பூமியாவது திண்ணம்.

ஆனால் சமய இலக்கியங்களில் மட்டும் பரிச்சயம் உடையவர்கள் பிறருக்குப் போதிப்பதிலேயே தங்களின் வாழ்க்கையின் சாரம் இருப்பதாக நம்புகிறார்கள். தான் சுவைக்காத ஒன்றை விற்றுப்பிழைக்கும் வெற்று வியாபாரிகளாகவே சமயத்துறையில் பலரும் இருப்பது துரதிருஷ்டம்.

சிகாகோ சர்வசமயப் பேரவையில் பேசிய பல மதத்தினரும் என் மதமே உயர்ந்தது என்று அடித்துக் கூறி, சிலரின் கைத்தட்டலைப் பெற்றனர்; மனிதகுல மேன்மைக்காகப் பேசியவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் 5-ஆவது மற்றும் 20-ஆவது நபர்கள் ‘சகோதர சகோதரிகளே’ என்று கூறவும் செய்தனர். ஆனால் விவேகானந்தர் 23-வது நபராக, கடைசி பேச்சாளராக ‘அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே’ என்று விளித்து அனைவருக்கும் விழிப்பூட்டினார்.

இந்து மதம் எல்லோருக்கும் தாய் மதம் போன்றது. ஏனென்றால் அது அனைவரையும் அரவணைக்கிறது. அவரவருக்குரிய மரியாதையைத் தருகிறது என்ற சநாதன தர்மத்தின் சாராம்சத்தை அன்று முழங்கினார் சுவாமி விவேகானந்தர்.

பாரதத்தின் பிரதிநிதி என்பதோடு உலகிலுள்ள எல்லா மக்களின், ஏழை எளியவர்களின் நலன்களுக்காகத் தான் வந்து உதித்தவர் என்ற சர்வாத்ம பாவனையில் சுவாமி விவேகானந்தர் அந்த உரையினைப் பொழிந்தார்.

மிக முக்கியமாக, ஒட்டுமொத்த உலக மக்களின் முன்னேற்றத்திற்கான அனைத்துச் சமயங்களின் ஒரே பிரதிநிதியாக சுவாமிஜி உரையாற்றினார்! ‘அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே’ என்ற அவரது ஒற்றை வரி, அரங்கில் இருந்த 4,000 பேரை இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்ய வைத்தது. இது ஓர் உலக சாதனை.

முன்பின் தெரியாத ஒருவரின் முதல் ஒரு வரி பேச்சினால், பிரிந்திருந்த அந்நிய மக்களின் 8,000 கரங்கள் இணைந்தன; 4,000 இதயங்கள் திரண்டன. விவேகானந்தரின் சிகாகோ முதல் பிரசங்கள் 3.5 நிமிடங்கள்தான் நிகழ்ந்தது. பகவத் கீதை 18 அத்தியாயங்கள் போல், 18 வாக்கியங்களே அவை; 472 சொற்கள் மட்டுமே. அவ்வளவு சிறிய உரைதான் என்றாலும் சீர்மை மிகுந்தது அது.

சுவாமிஜி பேசியதன் செல்வாக்கு, சிந்தனை வீச்சு, ஆன்மிக உயர்நிலை ஆகியவை உலக அளவிலும், நமது நாட்டின் அளவிலும், சமுதாய வளர்ச்சியிலும், தனிமனிதரின் மேம்பாட்டிலும் எத்தனையோ நல்ல விளைவுகளை ஏற்படுத்தின. அதில் குறிப்பாக சிலவற்றைக் குறிப்பிடலாம்.

முதலாவதாக, இந்தியர்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்தார்கள். அன்று அடிமை பாரதத்திலிருந்து சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று தன்னம்பிக்கை வித்தினை விதைத்ததால்தான், இன்று சுதந்திர பாரதத்தில் நாம் சந்திராயனைச் செலுத்த முடிந்தது. இரண்டாவது, இந்தியர்கள் தங்கள் பலத்தையும் பாரம்பரியப் பெருமையையும் உணரத்தொடங்கினார்கள். மூன்றாவது, அந்நிய கலாச்சார அடிமைத்தனத்திலிருந்தும் மோகத்திலிருந்தும் இந்தியர்கள் விழித்தெழ ஆரம்பித்தனர்.

நான்காவது, பாரதம் அரசியல் மற்றும் சமுதாய விடுதலைக்காக வேட்கை கொள்ளத் தொடங்கியது. ஐந்தாவது, நமது மக்களின் விழிப்புணர்வைக் கண்டு பிற நாட்டினர் நம்மை மதிக்க ஆரம்பித்தனர். ஆறாவது, உலகம் பாரதத்தை – அதன் மெய்ஞ்ஞானத்தைக் கண்டு வியக்க ஆரம்பித்தது.

சுவாமி விவேகானந்தர் 130 வருடங்களுக்கு முன்பு சிகாகோ சொற்பொழிவில் உரையாற்றியபோது, ‘பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று -  இவற்றால் உண்டான மத வெறி. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பல மடங்கு உயர்நிலையை எய்தியிருக்கும்’ என்று கூறினார்.

அதோடு, அந்நிய மண்ணில் அமெரிக்கர்கள் மத்தியில் அதுவும், கிறிஸ்தவர்களின் மத்தியில் சுவாமி விவேகானந்தர் சிங்கமென இவ்வாறு மொழிந்தார்: ‘மக்கள் பாவிகள் அல்ல, தெய்வத்தன்மை வாய்ந்தவர்கள்.’

இதைக் கேட்டுப் பலரும் வியப்புற்றனர். அதில் ஒருவர் இது பற்றி ஒரு கவிதையே எழுதிவிட்டார். அந்தக் கவிதையின் கருத்து, ‘காவி உடையில் அழகுமிக்க ஓர் ஹிந்து துறவியின் பேச்சைக் கேட்டேன். மானுடம் முழுவதும் கடவுளின் அம்சம் என்றார் அவர்; நாம் பாவிகள் அல்ல என்றார். இதைக் கேட்டதும் மீண்டும் கூறுங்கள் என்று குரல் கொடுத்தேன். சர்வசமய சபை அந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டு ஆரவாரம் செய்தது’ என்பதாகும்.

சுவாமிஜியின் சர்வசமயப் பேரவையில் ஹிந்து சமயப் பேருரையைப் பற்றிய தமது கருத்தை சகோதரி அருமையாகக் கூறினார்: “விவேகானந்தர் பேச தொடங்கியபோது ஹிந்துக்களின் சமய கருத்துகளைப் பற்றிக் கூறியதாகத் தோன்றிற்று. ஆனால் அவர் பேச்சை நிறைவு செய்தபோது இந்து சமயம் படைக்கப்பட்டது.”

சுவாமி விவேகானந்தர் படைத்த இந்து சமயம் எப்படிப்பட்டது?

‘கற்பு நெறியில் தன்னையும் காத்துக் கொண்டு தன் கணவனையும் காப்பாற்றி, தகுதி மிக்க புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே சிறந்த பெண்மணி’ என்றார் திருவள்ளுவர். (குறள் – 56).

சுவாமி விவேகானந்தர் உரைக்கும் ஹிந்துவானவன் கற்புடைய மங்கையர் போல் முதலில் தனது சமய நெறிகளைக் கடைப்பிடிப்பான்; தன் சமயத்தைக் காப்பாற்றுவான். கற்புடைய பெண் தன் கணவனைக் காப்பதுபோல், உண்மையான ஹிந்துவானவன் தன்னைச் சேர்ந்தோரையும் தன் சமயத்தின் பாதுகாவலனாக மாற்றிவிடுவான். பிற சமயங்களையும் மதிப்பான். தன் சமயத்தையும் கடைப்பிடித்துக் காப்பாற்றி, பிற சமயங்களுடன் நல்லிணக்கம் வைத்து பொதுமக்களின் நன்மைக்காகப் பாடுபடுவதே இன்றைய ஹிந்துவானவன் செய்ய வேண்டியது.

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளின்படி, ஒவ்வோர் இந்தியரும் தங்களது மதக் கோட்பாடுகளை முதலில் கடைப்பிடிப்பவராக விளங்க வேண்டும். தனது சமய வாழ்க்கையில் ஆழம் மிக்கவராக, அனுஷ்டானம் கொண்டவராகத் திகழ வேண்டும்.

அவ்வாறு ஆன்மிகத்தில் வளர்ந்த பிறகு அவரது கவனம் எங்கே இருக்க வேண்டும் தெரியுமா? எங்கே இருக்கும் தெரியுமா? மக்களின் பொருளாதாரச் சீர்கேடு, வறுமை, கலாசாரச் சீரழிவு, கல்வி அறிவின்மை, பசி பஞ்சம் பட்டினி, திடீரென தாக்கும் தொற்றுநோய்கள், இயற்கைச் சீரழிவுகள் ஏற்படக் காரணங்கள் போன்ற உலக பொதுப் பிரச்னைகளைப் புரிந்து கொள்பவராக அவர் விளங்க வேண்டும். அவற்றுக்கான தீர்வு காண்பவராக இருக்க வேண்டும். மக்கள் துன்பப்படும்போது தான் வணங்கும் தெய்வமே துன்பப்படுதவதாக நினைத்து சிவ சேவையான ஜீவ சேவை செய்ய வேண்டும்.

உன்னதமான இந்த மனநிலை, ஆன்மிக அனுபவம் ஹிந்து மதத்தினர் மட்டுமல்ல, எல்லா மதத்தினரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றல்லவா? அதைத்தான் சுவாமிஜி பாரதத்தின் பெருமையாக, பண்பாடாகத் தமது சிகாகோ உரையில் உரைத்தார்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1993, ஆகஸ்ட், 28 முதல் செப்டம்பர் 5 வரை நிகழ்ந்த சிகாகோ இரண்டாவது சர்வசமயப் பேரவையில் உலகெங்கிலுமிருந்து சமார் 6,000 பேர் கலந்து கொண்டனர். அதில் ரோமன் கத்தோலிக்க தலைவர் ஜோஸப் பெர்னாண்டினும் தலாய் லாமவும் மற்றும் பலரும் கையொப்பமிட்ட ஒா் அறிக்கை வெளியிடப்பட்டது. உலக அமைதியும் நீதியும் தழைக்க எல்லா மதங்களின் ஒத்துழைப்பை நாட வேண்டும் என்ற அந்த அறிக்கை பின்வரும் உறுதிமொழியை மேற்கொள்ள வற்புறுத்தியது:

‘மதத்தின் பெயரால் இனிமேல் பிறரை நாம் அடக்கியாள மாட்டோம்; புண்படுத்த மாட்டோம்; மனித உயிர்களைக் கொல்ல மாட்டோம்; சித்திரவதை செய்ய மாட்டோம்’.

வாழு; வாழ விடு! இது சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது; அதை என்று மக்கள் கேட்கிறார்களோ அன்று உலகம் சொர்க்க பூமி ஆகிவிடும்.

இன்று (செப். 11) சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வசமய மாநாட்டில் உரையாற்றிய தினம்.

கட்டுரையாளர்:

சுவாமி விமூர்த்தானந்தர் 

தலைவர்,

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.Webteam