சென்னை
ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் 17-வது தலைவராக கவுதமானந்தஜி மகாராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலர்கள் குழு மற்றும் மிஷனின் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் தலைவராக ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜ்(96) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் 17-வது தலைவர் ஆவார்.
1955-ல் மந்திர தீட்சை
ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜின் முன்னோர் தமிழகத் தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர் 1929-ம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். 1955-ல் ஸ்ரீமத் சுவாமியதீஷ்வரானந்தஜியிடம் மந்திர தீட்சை பெற்றார். அதன்பிறகு 6 ஆண்டுகள் டெல்லி மையத்தில் துறவற வாழ்க் கைக்கு அறிமுகமாகி பல்வேறு துறைகளில் பணியாற்றினார். 1966-ல் ராமகிருஷ்ண இயக்கத்தின் 10-வது தலைவரான ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்த மகாராஜிடமிருந்து சந்நியாச தீட்சையும் சுவாமி கவுதமானந்தர் என்ற துறவுற நாமத்தையும் பெற்றார். அதன்பிறகு, மும்பை, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மிஷன் மையத்தில் பணியாற்றினார்.
பின்னர், ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலராகவும், ராமகிருஷ்ண மிஷனின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் ஆனார். 1995-ல் சாரதாபீடத்திலிருந்து சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். புதுச்சேரி, ஆந்திராவில், கடப்பா, திருப்பதி, தமிழகத்தில் செங்கம், தஞ்சாவூர், திருமுக்கூடல், விழுப்புரம் போன்ற இடங்களில் மடம் மற்றும் மிஷனின் புதிய கிளைகளைத் தொடங்குவதற்கும் தனது ஆதரவை வழங்கியவர்.
2017-ல் ராமகிருஷ்ண இயக்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தீட்சை குருவாகவும், துணைத் தலைவராகவும் இந்தியாவிலும், உலகின்பல்வேறு பகுதிகளிலும் பயணம் மகாராஜ் செய்துள்ளார்.
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மார்ச் 26-ம் தேதி காலமானதை தொடர்ந்து, ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜ் மடத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.