தினமலர் நெல்லை பதிப்பு - 25-12-2023
சென்னை ராமகிருஷ்ண மடம் நெல்லையில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்
திருநெல்வேலி, டிச. 25-
நெல்லையில் வெள்ளத்தால் பாதித்த 1000 குடும்பங்களுக்கு சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதித்த வண்ணார்பேட்டை, கம்பராமாயண தெருவில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சுவாமி அபவர்கானந்த மகராஜ், சுவாமி ஸுப்ரஜ்ஞானந்த மகராஜ், சுவாமி அர்கப்ரபானந்த மகராஜ் ஆகியோர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இதனையடுத்து ராமகிருஷ்ண மடத்தின் சுவாமிகளுடன் நெல்லை சாரதா கல்லூரி நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் செந்தில் பாண்டியன், வினோத், டேவிட் உட்பட பலர் இணைந்து வெள்ளம் பாதித்த நெல்லை கைலாசபுரம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, அருகன் குளம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று 1000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
தூத்துக்குடியில் இன்று வழங்கல் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் இன்றும் (25ம் தேதி), நாளையும் (26ம்தேதி) வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.